Body

டிஜிட்டல் கல்வி அணுகலை மேலும் விரிவுபடுத்தும் நோக்கில், தல்துவ பௌத்த மகா வித்தியாலயத்திற்கு அனைத்து நவீன வசதிகளுடனும் கூடிய முழுமையான தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப (ICT) ஆய்வுகூடத்தை டயலொக் அன்பளிப்புச் செய்கிறது

2026 நவம்பர் 27         கொழும்பு

 

நினைவுப் பலகை திறந்து வைக்கப்படுகிறது. இடமிருந்து வலமாக: பிரதமர் அலுவலகத்தின் மேலதிகச் செயலாளர் (அபிவிருத்தி) திரு. ஏ.பி.எம். அஷ்ரப்; டயலொக் ஆசிஆட்டா பிஎல்சியின் குழுமப் பிரதான கூட்டாண்மை அதிகாரி திரு. அசங்க பிரியதர்ஷன; டயலொக் ஆசிஆட்டா பிஎல்சியின் குழுமப் பிரதான சந்தைப்படுத்தல் அதிகாரி திரு. லசந்த தெவரப்பெரும; கல்வி மற்றும் உயர்கல்வி பிரதி அமைச்சர் கௌரவ கலாநிதி மதுர செனவிரத்ன; தல்துவ பௌத்த கல்லூரியின் அதிபர் திரு. வி. சஞ்சீவ சிசிரகுமார; தெஹியோவிட்ட பிரதேச சபையின் தவிசாளர் திரு. சமன்சிறி வீரசிங்க; தெஹியோவிட்ட பிரதேச சபையின் உப தவிசாளர் திரு. நந்தன சீமவித்தாரண.

இலங்கையின் முன்னணி இணைப்பு வழங்குநரான டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி, ரூ. 420 மில்லியன் பெறுமதியான ‘டித்வா’ அனர்த்தத்திற்குப் பிந்தைய மீட்புத் திட்டத்தின் கல்வி மறுசீரமைப்புத் திட்டங்களின் ஒரு பகுதியாக, தல்துவ பௌத்த மகா வித்தியாலயத்தில் அனைத்து நவீன வசதிகளுடனும் கூடிய ICT ஆய்வுகூடமொன்றை நிறுவி, பாடசாலையின் உட்கட்டமைப்பு மேம்பாட்டுப் பணிகளை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது. இதனுடன், சிலாபம் மாவட்டப் பொது வைத்தியசாலை மற்றும் கொத்மலை பிரதேச வைத்தியசாலை உள்ளிட்ட முக்கிய சுகாதார நிலையங்களின் புனரமைப்புப் பணிகளையும் வெற்றிகரமாக நிறைவு செய்துள்ள டயலொக், அவசர மற்றும் அத்தியாவசிய சுகாதார சேவைகளை வலுப்படுத்தும் நோக்கில் மேலும் பல சுகாதார உட்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டங்களைத் தொடர்ந்து செயல்படுத்தி வருகிறது.

இத்தகவல் தொழில்நுட்ப ஆய்வுகூடம் அக்டோபர் 27 அன்று கே/தெஹி/தல்துவ பௌத்த மகா வித்தியாலயத்தில் (KE/DEHI/Thalduwa Bauddha M.V.) உத்தியோகபூர்வமாகத் திறந்து வைக்கப்பட்டது. இதன் மூலம் மாணவர்களுக்கு நவீன கணினி வசதிகள் மற்றும் டிஜிட்டல் கற்றல் வளங்களைப் பெறும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இலங்கை முழுவதிலும் உள்ள 20 பாடசாலைகளில் முழுமையான வசதிகளுடன் கூடிய தகவல் தொழில்நுட்ப ஆய்வுகூடங்களை நிறுவி, தொழில்நுட்பம் சார்ந்த கற்றலுக்கான அணுகலை விரிவுபடுத்தி, டிஜிட்டல் இடைவெளியைக் குறைக்க உதவும் டயலொக்கின் திட்டத்தின் கீழ் ஆதரவளிக்கப்படும் முதலாவது பாடசாலையாக இத்திட்டம் அமைந்துள்ளது.

தகவல் தொழில்நுட்ப ஆய்வுகூடங்களை நிறுவுவதுடன் மட்டுமல்லாமல், இத்திட்டத்தின் கீழ் ஆதரவளிக்கப்படும் அனைத்துப் பாடசாலைகளுக்கும் இரண்டு வருட காலத்திற்கு வாடகைக் கட்டணமின்றி broadband இணைய இணைப்பையும் டயலொக் வழங்கியுள்ளது. இது மாணவர்களும் ஆசிரியர்களும் டிஜிட்டல் கற்றல் வளங்களை முழுமையாகப் பயன்படுத்தவும், புதிய வசதிகளின் நன்மைகளை உச்சளவில் பெற்றுக்கொள்ளவும் உதவுவதுடன், மேலும் இணைக்கப்பட்ட மற்றும் தொழில்நுட்பம் சார்ந்த கற்றல் சூழலையும் உருவாக்குகிறது.

இந்நிகழ்வில் கல்வி மற்றும் உயர்கல்வி பிரதி அமைச்சர் கலாநிதி மதுர செனவிரத்ன; கோட்டக் கல்விப் பணிப்பாளர் வணக்கத்திற்குரிய சூரியவௌ தம்மபால தேரர்; தெஹியோவிட்ட பிரதேச சபையின் தவிசாளர் திரு. சமன்சிறி வீரசிங்க; பிரதமர் அலுவலகத்தின் மேலதிகச் செயலாளர் திரு. ஏ.பி.எம். அஷ்ரப்; மற்றும் தல்துவ பௌத்த கல்லூரியின் அதிபர் திரு. வி. சஞ்சீவ சிசிரகுமார ஆகியோர் கலந்துகொண்டனர். டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி சார்பில் குழுமப் பிரதான சந்தைப்படுத்தல் அதிகாரி திரு. லசந்த தெவரப்பெரும மற்றும் குழுமப் பிரதான கூட்டாண்மை அதிகாரி திரு. அசங்க பிரியதர்ஷன ஆகியோர் பங்கேற்றனர்.

இம்முன்னெடுப்பு குறித்துக் கருத்துத் தெரிவித்த கல்வி மற்றும் உயர்கல்வி பிரதி அமைச்சர் கலாநிதி மதுர செனவிரத்ன, "டிஜிட்டல் ரீதியில் வலுவூட்டப்பட்ட எதிர்காலத்தை நோக்கி இலங்கை தனது பயணத்தைத் தொடர்ந்து வரும் நிலையில், டிஜிட்டல் கற்றல் அணுகலை விரிவுபடுத்துவது ஒரு முக்கிய தேசிய முன்னுரிமையாகும். ஒவ்வொரு மாணவருக்கும் தொழில்நுட்பத்தை அணுகுவதற்கும், டிஜிட்டல் பொருளாதாரத்தில் அர்த்தமுள்ள வகையில் பங்கேற்பதற்குத் தேவையான திறன்களை வளர்த்துக்கொள்வதற்கும் வாய்ப்புக் கிடைக்க வேண்டும். நாடெங்கிலுமுள்ள மாணவர்களுக்குப் பரந்த வாய்ப்புகளை உருவாக்குவதற்கும் டிஜிட்டல் கல்வி உட்கட்டமைப்பை வலுப்படுத்துவதற்கும் டயலொக் வழங்கி வரும் பங்களிப்பையும் ஆதரவையும் நாம் பாராட்டுகிறோம்" என்றார்.

இம்முன்னெடுப்பு குறித்து டயலொக் ஆசிஆட்டா பிஎல்சியின் குழுமப் பிரதான சந்தைப்படுத்தல் அதிகாரி திரு. லசந்த தெவரப்பெரும கூறுகையில், "இன்று நாம் இளைய தலைமுறையினருக்கு உருவாக்கிக் கொடுக்கும் வாய்ப்புகளே எமது நாட்டின் எதிர்காலத்தை வடிவமைக்கும். தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் கற்றலுக்கான அணுகலை விரிவுபடுத்துவதன் மூலம், மேலும் பல மாணவர்கள் தமது ஆற்றலை உணர்ந்துகொள்ளவும் எதிர்கால வாய்ப்புகளுக்குத் தயாராகவும் உதவ முடியும் என நாம் நம்புகிறோம். இம்முன்னெடுப்பானது உட்கட்டமைப்பு வசதிகளை வழங்குவதைத் தாண்டிய ஒன்றாகும். இது அறிவுக்கான அணுகலை விரிவுபடுத்துவது, புதிய வாய்ப்புகளைத் திறந்து விடுவது மற்றும் இலங்கையின் டிஜிட்டல் எதிர்காலத்தில் எந்தப் பிரதேசத்தில் வாழ்ந்தாலும் ஒவ்வொரு மாணவரும் பங்கேற்பதை உறுதிசெய்வது பற்றியதாகும்" என்றார்.

இத்திட்டத்தின் ஊடாக, டிஜிட்டல் உட்கட்டமைப்பு, இணைப்பு மற்றும் கல்வி ஆகியவற்றை ஒன்றிணைப்பதன் மூலம் இணைப்பின் நன்மைகளை அனைவருக்கும் கிடைக்கச் செய்யும் தனது அர்ப்பணிப்பை டயலொக் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்கின்றது. பங்கேற்கும் பாடசாலைகளுக்காக 130 மில்லியன் ரூபா முதலீட்டில் முன்னெடுக்கப்படும் இத்திட்டமானது, வேகமாக டிஜிட்டல்மயமாகி வரும் உலகில் வெற்றிபெறத் தேவையான கருவிகள், வாய்ப்புகள் மற்றும் திறன்களை இலங்கையின் மேலும் பல மாணவர்கள் பெற்றுக்கொள்ள வழிவகுப்பதன் மூலம், இணைப்பின் ஊடாக வாழ்வை வலுவூட்டும் டயலொக்கின் நோக்கத்தை மேலும் உறுதிப்படுத்துகிறது.

தல்துவ பௌத்த மகா வித்தியாலயத்தில் புதிதாக நிறுவப்பட்ட தகவல் தொழில்நுட்ப ஆய்வுகூடத்தைப் பார்வையிடும் அழைப்பாளர்கள்.