Body

பாடசாலை ரக்பி சாம்பியன்களைக் கௌரவிக்கும் 'Dialog Schools Rugby Awards 2026'

2026 செப்டம்பர் 22         கொழும்பு

 

டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி நிறுவனத்தின் குழும தலைமை சந்தைப்படுத்தல் அதிகாரி திரு. லசந்த தெவரப்பெரும அவர்களால் விருது வழங்கப்படுகிறது.
கல்வி அமைச்சின் மேலதிக செயலாளர் திரு. கமல் ஆரியாசிங்க மற்றும் இலங்கை பாடசாலைகள் ரக்பி கால்பந்து சங்கத்தின் தலைவர் திரு. புத்திக அத்தனாயக்க ஆகியோர் உடன் இருக்கின்றனர்.

பாரம்பரிய ரக்பி வல்லரசுகளாகத் திகழும் பாடசாலைகள் முதல், இவ்விளையாட்டு புதிதாகக் காலூன்றி வரும் பாடசாலைகள் வரை, இலங்கையில் பாடசாலை ரக்பி விளையாட்டின் பரந்த வளர்ச்சியையும் ஆழத்தையும் வெளிப்படுத்திய ஒரு பருவத்தைக் கொண்டாடும் வகையில் 'Dialog Schools Rugby Awards 2026' விருது விழா அண்மையில் நடைபெற்றது.

இலங்கையின் முதன்மை இணைப்புச் சேவை வழங்குநரும் விளையாட்டுத் துறையின் தீவிர ஆதரவாளருமான டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி (Dialog Axiata PLC) இனால் ஏற்பாடு செய்யப்பட்ட இவ்விருது விழா, செப்டம்பர் 21 ஆம் திகதி BMICH இல் நடைபெற்றது. இந்த விளையாட்டுப் துறையில் தமது முத்திரையைப் பதித்த வீரர்கள், பயிற்றுநர்கள் மற்றும் பாடசாலைகள் இதில் ஒன்றாகக் கூடினர்.

நாட்டின் 'நாளைய சாம்பியன்களை வலுவூட்டும்' (Powering the Champions of Tomorrow) தொலைநோக்கிற்கு அமைவாக, தேசிய அளவில் இளம் வீரர்கள் பிரகாசிப்பதற்கான தளத்தை வழங்கும் Dialog Schools Rugby தொடரில், இம்முறை 90 பாடசாலைகளைச் சேர்ந்த 2,700 க்கும் மேற்பட்ட வீரர்கள் போட்டியிட்டனர்.

இவ்விருது விழா மூன்று பிரிவுகளின் கீழ் (Divisions), பல கட்டங்களாகச் சாதனைகளை அங்கீகரிக்கிறது. இக்கட்டமைப்பு, நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் புகழ்பெற்ற ரக்பி பாடசாலைகளும் புதிதாக உருவாகி வரும் அணிகளும் போட்டியிட்டு அங்கீகாரத்தைப் பெற வாய்ப்பளித்துள்ளது.

முதலாம் பிரிவின் (Division 1) Segment A கோப்பையைக் கண்டியின் கண்டி த்ரினிட்டி கல்லூரி (Trinity College) கைப்பற்றியதுடன், கொழும்பு சாஹிரா கல்லூரி இரண்டாமிடத்தைப் பெற்றது. சென். ஜோசப் கல்லூரி மற்றும் தர்ஸ்டன் கல்லூரி ஆகியன 'Plate' சாம்பியன்ஷிப்பையும், சயன்ஸ் கல்லூரி மற்றும் கண்டி கிங்ஸ்வுட் கல்லூரி ஆகியன 'Bowl' சாம்பியன்ஷிப்பையும் தட்டிச் சென்றன.

முதலாம் பிரிவில் இலங்கையின் முன்னணி ரக்பி பாடசாலைகள் பலவும் பங்குபற்றின. Group 1A, 2A மற்றும் 3A பிரிவுகளின் கீழ் இசிபதன கல்லூரி, சென் பீட்டர்ஸ் கல்லூரி, வெஸ்லி கல்லூரி, றோயல் கல்லூரி மற்றும் சாஹிரா கல்லூரி உள்ளிட்ட அணிகள் கௌரவிக்கப்பட்டன.

Segment B பிரிவில், குறிப்பாக கண்டியைச் சேர்ந்த பாடசாலைகளுக்கு இடையே கடுமையான போட்டி நிலவியது. வித்யார்த்தா கல்லூரி மற்றும் தர்மராஜ கல்லூரி ஆகியன கோப்பைக்காகப் போட்டியிட்ட அதேவேளை, மகரகம மத்திய கல்லூரி, காலி ரிச்மண்ட் கல்லூரி மற்றும் கல்கிஸ்ஸ லலித் அதுலத்முதலி கல்லூரி ஆகிய பாடசாலைகள் 'Plate' மற்றும் 'Bowl' பிரிவுகளில் அங்கீகாரம் பெற்றன.

பாரம்பரிய எல்லைகளைத் தாண்டி பாடசாலை ரக்பி விரிவடைந்து வருவதை Segment C தெளிவுபடுத்தியது. இதில் C.W.W. கன்னங்கர வித்யாலயா, மதீனா தேசிய பாடசாலை, தல்தூவ பௌத்த கல்லூரி, நுகேகொட சென். ஜோன்ஸ் கல்லூரி, பிலியந்தல மத்திய கல்லூரி மற்றும் மொறட்டு மகா வித்யாலயா உள்ளிட்ட பாடசாலைகள் விருதுகளைப் பெற்றன.

இதேபோன்று 2 ஆம் பிரிவிலும் (Division 2) ரக்பி விளையாட்டின் வளர்ச்சி புலப்பட்டது. இதில் நாலந்தா கல்லூரி மற்றும் இப்பாகமுவ மத்திய கல்லூரி ஆகியன கோப்பைப் பிரிவில் முன்னிலை வகித்தன. அத்துடன் டட்லி சேனாநாயக்க கல்லூரி, காலி மஹிந்த கல்லூரி, ருவன்வெல்ல மத்திய கல்லூரி மற்றும் எஹெலியகொட மத்திய கல்லூரி ஆகியனவும் கௌரவிக்கப்பட்டன.

3 ஆம் பிரிவு (Division 3) ரக்பி விளையாட்டு நாடு முழுவதும் பரவி வருவதை மிகச் சிறப்பாக வெளிப்படுத்தியது. ஹத்தத்துவ மகா வித்யாலயம், வெல்லஸ்ஸ மத்திய கல்லூரி, அம்பாந்தோட்டை சென் மேரீஸ் கல்லூரி, பண்டாரவளை சீவாலி மகா வித்யாலயம், ஹேவாஹெட்ட மத்திய கல்லூரி, கண்டி மொடல் பாடசாலை, படுவஸ்னுவர S.W.R.D. பண்டாரநாயக்க வித்யாலயம் மற்றும் குருநாகல் D.B. வெலகெதர வித்யாலயம் ஆகிய பாடசாலைகள் இதில் அங்கீகாரம் பெற்றன.

டயலொக் நிறுவனம் இலங்கை தேசிய கிரிக்கெட், கரப்பந்தாட்ட மற்றும் ஈஸ்போர்ட்ஸ் (eSports) அணிகளின் பிரதான அனுசரணையாளராகச் செயல்பட்டு வருகிறது. அத்துடன் தேசிய பாரா விளையாட்டு விழா மற்றும் பாரா ஒலிம்பிக் போட்டிகளில் போட்டியிடும் இலங்கை அணிகளுக்கு ஆதரவளிப்பதுடன், 'Sri Lanka Open Golf Championship' தொடரின் பிரதான அனுசரணையாளராகவும் விளங்குகிறது. மேலும், ஜனாதிபதி தங்கக் கோப்பை வோலிபோல் தொடர் மற்றும் பாடசாலை ரக்பி தொடர்களுக்கும் டயலொக் ஆதரவளித்து வருகிறது. இலங்கை தேசிய ஒலிம்பிக் கமிட்டியுடனான தனது கூட்டாண்மை ஊடாக, லொஸ் ஏஞ்சலஸ் ஒலிம்பிக் போட்டிகளுக்கான இலங்கையின் ஆயத்தங்களுக்கும் டயலொக் தொடர்ந்து ஆதரவளிக்கும்.